search icon
என் மலர்tooltip icon
    • இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
    • சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.

    நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.

    சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று (மே 16) இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
    • ஊடங்கங்கள் எந்த முகமும் கருத்தியலும் இல்லாமல் இருந்த காலங்களில் மக்கள் ஒரு சார்புடைய கருதியல்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர்.

    ஊடகங்களுக்கு தான் ஏன் அதிகம் பேட்டி அளிப்பதில்லை என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்று (மே 16) இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த பேட்டியில் பேசிய அவர், ஊடகங்கள் முன்னர் இருந்தது போல் நடுநிலைமையாக இல்லை என்றும் பத்திர்கையாளர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கருத்தியலை மக்கள் மத்தியில் திணிக்கவே முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

     

    எனவே இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் சென்று கொண்டிருக்கும் தவறான பாதையில் தான் செல்ல விருப்பவில்லை என்றார். தான் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவன் என்றும் நடுநிலைமையுடன் செயல்படாத ஊடங்கங்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டிய விருப்பமும் அவசியமும் இல்லை என்று தெரிவித்தார்.

     

    மேலும் அவர் பேசுகையில், ஊடங்கங்கள் எந்த முகமும் கருத்தியலும் இல்லாமல் இருந்த காலங்களில் மக்கள் ஒரு சார்புடைய கருதியல்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது மக்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் விடவிதிமான வழிகள் வந்துவிட்டன.

    எனவே எனக்கான வழியை நான் வகுத்திக்கொண்டேன் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி தவிர மக்களிடம் அரசின் முடிவுகள் குறித்து ஊடகங்களின் எந்த கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சிகளால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது.
    • பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் குண்டூர், ஆவணி கட்டா, நாகை லங்கா பகுதிகளில் பல்வேறு வகையான மிளகாய் பயிரிடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது. மேலும் வெயில் அதிகரிப்பால் பச்சை மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக பஜ்ஜி செய்ய பயன்படுத்த கூடிய மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

    இந்த வகை மிளகாய் கிலோ ரூ.115 வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது.
    • படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப் பதக்க ம்வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

     

    கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒன்றை வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.

    அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் கார்த்திக் ஆர்யனின் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கமிட்மென்டை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
    • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

    காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

    பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

    புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

    இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

    இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
    • நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா எவ்வாறு தயாரானது?

    பதில்:- வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல் உழைக்குமாறு கட்சி உறுப்பினர்களை ஓராண்டுக்கு முன்பே கேட்டுக் கொண்டேன். நாங்கள் அனைவரும் தாமரைக்காக உழைத்தோம். எதிர்க்கட்சிகள் கூட தாமரைக்காக உழைக்கின்றன. அவர்கள் எவ்வளவு சேற்றை அள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மலரும்.

    பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அடுத்து வரும் எங்களின் ஆட்சியின் முதல் 125 நாட்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளேன். இதில் 25 நாட்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும்.

    கேள்வி:- மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்களே?

    பதில்:- மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான அமலாக்க இயக்குநரகம் 2014-ம் ஆண்டுக்கு (காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ்) முன் பயனற்றதாக இருந்தது. தற்போது திறம்பட செயல்படத் தொடங்கி உள்ளது.

    ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, ஏழைகளுக்கு திருப்பி அளிக்கும் வகையில், சட்டத்தை உருவாக்க வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அமலாக்கத்துறையால் இதுவரை கைப்பற்றப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடியை ஏழைகளுக்கு திருப்பி கொடுத்துள்ளேன்.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே உடையை நோக்கிய நகர்வாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறதே?

    பதில்:- கோவா மக்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்களா? கோவா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுகிறார்களா? பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இது எந்த அரசியல் கட்சியின் விவகாரமும் அல்ல. இது அரசியல் நிர்ணய சபையில் இருந்து வந்தது.

    கேள்வி:- நாட்டின் அரசியலமைப்பை மாற்றவும், கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நீக்கவும் பா.ஜனதா விரும்புவதாக கூறப்படுகிறதே?

    பதில்:- ஜவகர்லால் நேருவில் தொடங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெவ்வேறு காலங்களில் அரசியலமைப்பை கிழித்தெறிந்தனர். அரசியலமைப்பை அவர்கள் தாக்கிய காலம் வெகு தொலைவில் உள்ளது. அதனால்தான் இன்று நான் தைரியமாக மக்களிடம், மோடி உயிருடன் இருக்கிறார் என்று சொல்கிறேன். இந்தியாவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறிய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உணர்வுக்காக போராடுவேன். அதற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்.

    கேள்வி:- பா.ஜனதா அரசு பணக்காரர்கள் சிலருக்கு பலன்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது பற்றி?

    பதில்:- என்னால் நேர்மையற்ற முறையில் யாரேனும் பயனடைந்தால் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் தவறான வழியில் யாருக்காவது நன்மை செய்திருந்தால் நான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன். செல்வத்தை உருவாக்குபவர்கள்-தொழிலாளர்களைப் பற்றி சமமாக கவலைப்படுகிறேன்.

    கேள்வி:- நீங்கள் வகுப்புவாத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

    பதில்:- நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன். ஆனால் முத்தலாக் தவறு என்று நான் சொன்னால், முஸ்லிம் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டேன்.

    நான் இப்படி முத்திரை குத்தப்பட்டால் அது விமர்சிப்பவர்களின் நிர்ப்பந்தம் ஆகும். என்னுடையது அல்ல. நீங்கள் (எதிர்க்கட்சிகள்) வகுப்புவாதத்தை பின் பற்றினீர்கள். நான் அதை அம்பலப்படுத்தினேன். அவர்களின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை ஒப்பந்த முறையில் கொண்டு வருவோம் என்பதை நான் எதிர்த்தால், அதை மதச்சார்பின்மை காரணமாக செய்கிறேன். இதனால் நான் சிறு பான்மையினரை தாக்குவது போல் காட்டப்படுகிறது.

    கேள்வி:- 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்று கூறுவது பற்றி?

    பதில்:- வெற்றி தோல்வி பற்றி நான் ஒருபோதும் கூறவில்லை. 400 இடங்களைப் பற்றி முதலில் பேசியது மக்கள்தான். மக்களின் பார்வையை அறிந்துதான் அதை கூறினேன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 400 இடங்களைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த முறை 400-யை தாண்டிச் செல்ல வேண்டும் என்று சொல்வது ஒரு தலைவராக எனது கடமையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
    • காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.

    இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.

    இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை.
    • பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார்.

    1997-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் ராக்கி சவந்த். சுடாலி நம்பர் 1, குருக்ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார்.

    பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் 14-வது சீசனிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார்.

    சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். 45 வயதாகும் இவர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி பாலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்.

    மிகவும் மோசமான உடைகளை அணிவது, பலருடன் நெருக்கம் என அவர் போடாத ஆட்டமே கிடையாது. முதல் கணவரான ரித்தேஷ் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கானுடனும் ராக்கி சாவந்த் பிரச்சனை செய்து சண்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராக்கி சவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராக்கி சவந்தை அவரது முன்னாள் கணவர் தான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்.

     இதனைத்தொடர்ந்து அவருக்கு கருப்பையில் டியூமர் இருப்பதாகவும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுதொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×